நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகிறது.
யானை திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தில் G.V.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். மைக்கேல் கலை இயக்குநராகவும், அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராகவும்பணிபுரிந்துள்ளனர். பாபா பாஸ்கர், தினா நடனம் அமைக்க டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்குநர் ஹரி அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குநர் ஹரி அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது கேள்வியாளர் தரப்பிலிருந்து, “என்னதான் பெரிய திரைப்பிண்ணனி இருந்தாலும் சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு தான் அருண் விஜய் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். நிறைய நேர்காணல்களில் அவரே நேரடியாக இதை சொல்லியிருக்கிறார். ஒரு 10, 15 வருடம் முன்பு நீங்கள் இருவரும் கைகோர்த்திருக்கலாமே? இதை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்.?” என கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இயக்குநர் ஹரி, “என்னிடம் இதே கேள்வியை நிறைய பேர் கேட்பார்கள். அவர்களுக்கும் இந்த உண்மை இப்போது தான் நிறைய பேருக்கு புரிய வந்திருக்கும். நான் ஒரு முழு நேர கிரியேட்டர் இல்லை. நான் ஒரு Semi-Creator. ஒரு கமர்ஷியலா ஒரு வேலை பார்ப்பது போல தான், நான் பாலா சாரோ, அமீர் சாரோ கிடையாது. யாரை வேணாலும் வைத்து ஒரு ஆளுமையான படத்தை எடுக்க என்னால் முடியாது.
ஆனால் அருண் விஜயாகவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, தன்னை தானே நிறுத்திக் கொள்ளும்போதுதான் அவரை வைத்து படம் பண்ணும் அமைப்பே வருகிறது. அது அமையும் போது நல்ல தயாரிப்பாளர் அமைகிறார்.
ஒரு காலேஜ் அட்மிஷனுக்கு போனேன். ஒரு விஐபியை சந்தித்தபோது அவர் சொன்ன விஷயம், ரெக்கமண்டேஷன் மூலம் மகனுக்கு சீட் கேட்பதை விட, அவனாகவே அந்த சீட்டை பெறும்போது அவன் இன்னும் உறுதியாகவும் தகுதியாகவும் நினைப்பான். அதுக்கு முதலில் வழிவிட வேண்டும், அவனுக்கா கிடைக்கும் ஒன்றை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள். அவனுக்கா அந்த சீட் கிடைத்தால் கல்லூரி காலம் முழுவதும் தன்னம்பிக்கையுடன் இருப்பான்னு சொன்னார். அவர் அப்போது சொன்னது சூப்பர் வார்த்தைகள் அவர் சொன்னது.. அது மாதிரிதான்.. ” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், “யானை படத்தில் எமோஷனலாக நல்லனுபவம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு கிடைக்கும். அந்த எமோஷனும் செயற்கையாக இருக்காது. அதனால் பல இடங்களில் சிங்கிள் ஷாட் முயற்சித்திருப்பேன். அந்த ஒரிஜினல் எமோஷன் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.