சென்னை, 31 ஜனவரி 2022:- இணையத்தில் எப்போதாவது திடீரென எதாவது ட்ரெண்டாவது ஆகிவிடுவது வாடிக்கை. அப்படி, ‘ஒரு காதல் என்னதான் செய்யும்’ என்கிற வரிகள் இப்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.
ட்ரெண்டிங்
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்திருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் விஜய் டிவியில் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியின் ஓடிடி வடிவம் தற்போது தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதேபோல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3வது சீசன் ஒருபக்கம் வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இன்னொருபுறம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றிய தகவல்கள் நாளும் நாளும் செய்திகளாய் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்போதும் போல கொரோனா குறித்த செய்திகளும் ஆய்வுகளும் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றையும் தாண்டி பாக்கியலட்சுமியின் மாமானாருக்கு பக்கவாதம், பாரதி கண்ணம்மாவில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் வாக்குவாதம் என பேசுவதற்கு டாப்பிக் இல்லாமல் இல்லை.
டோலோ 650
ஒவ்வொருவரின் ரசனையை பொருத்து, ஒவ்வொருவரும் பேசுவது உண்டு. இவ்வளவு ஏன்? டோலோ 650 பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை கூட ட்ரெண்ட் ஆகி, ஏற்கனவே பல கோடி ரூயாய்க்கு இந்தியாவுக்கு விற்றுக்கொண்டிருந்த டோலோ 650 இன்னும் வைரலானது. இவற்றைத்தவிர அன்றன்று நடக்கும் விஷயங்கள் திடீரென ட்ரெண்டாகி, ஒரு இரண்டு மூன்று நாட்கள் அதுபற்றி எல்லோரையும் பேச வைப்பதும் நடக்கும்.
காண்ட்ராக்டர் நேசமணி
ஆனால் எதுவுமே இல்லை என்றால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகி விடுவது வழக்கம். அப்படி கடந்த காலங்களில் வடிவேலு நடித்த புகழ்பெற்ற கதாபாத்திரமான நேசமணி கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆனதை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்ததற்காக, தூங்கிக் கொண்டிருந்த ரமேஷ் கண்ணா வரை சென்று எழுப்பி அனைவரும் நியாயம் கேட்டனர்.
இப்படி பழைய திரைப்படங்கள், பழைய வசனங்கள், தற்போது நடக்கும் விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளுடன் ஒத்துப்போகும் பழைய திரைப்பட காட்சிகள் உள்ளிட்டவை இணையதள வாசிகளிடையே பேசுபொருளாகிவிடுவது ஒன்றும் புதிதல்ல. அண்மையில் கூட சாய் பல்லவி அழகா? என்று இணையவாசி எழுதிய பதிவு பாடி ஷேமிங் பண்ணுவதாக பலராலும் விமர்சிக்கப்பட்டது.
ஒரு காதல் என்னதான் செய்யும்
இப்படி ஒரு சூழ்நிலையில் ஃபேஸ்புக்கில், “ஒரு காதல் என்னதான் செய்யும்?” என்கிற புதிய ஒரு பேச்சு ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. எங்கு எப்படி தொடங்கியது என்று ட்ரேஸ் பண்ண முடியாத இந்த ட்ரெண்டிங் பேச்சு இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ட்ரோலாகி வருகிறது. பொதுவாக பிப்ரவரி 14-ஆம் தேதி வரக்கூடிய காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் உற்சாகமடைவது உண்டு.
புதிய காதலை தொடங்க நினைப்பவர்கள் சில கணக்குகளை போடவும் செய்வார்கள். ஆனால் காதலர் தினத்திற்கு 14 நாள் முன்னால் இருந்தே, ‘ஒரு காதல் என்ன செய்யும்?’ என்கிற இப்படி ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகி இருப்பது குறித்து இணையவாசிகள் பலரும், ‘எதுக்குடா இது ட்ரெண்டு ஆகுது?’ என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கின்றனர்.
பொதுவான இணையவாசிகள், எழுத்தாளர்கள், ஆக்டிவிஸ்ட்கள் என பலரும் நாமும் இதை ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று இதே கேள்வியை தங்களுடைய பக்கங்களில் கேட்டும் வைக்கின்றனர்.
அப்படித்தான் பேச்சுலர் திரைப்படத்தில் பணிபுரிந்த, நடித்தவரான எழுத்தாளர் கொற்றவையும் ஒரு பதிவில் இதே கேள்வியை கேட்டுவிட்டு இன்னொரு பதிவில், ‘ஒரு கலாய் போஸ்ட் என்ன செய்யும்? தேவையில்லாத ஆணிகளை புடுங்க உதவும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இதேபோன்று இணையவாசிகள் சிலர், “ஒரு காதல் என்ன செய்யும்..? , ஒரு மனிதனை பைத்தியம் போலாக்கும் தேவைப்படும் போது சைக்கோ பட்டத்தையும் கொடுக்கும்” என்றெல்லாமும் கருத்து கூறிவருகின்றனர்.
ஒரு வைரஸ் என்ன செய்யும்
அதிலும் பதிவர் ஒருவர் ஒருபடி மேலே சென்று, “ஒரு வெட்கம் என்ன செய்யும்?”, “ஒரு வைரஸ் என்ன செய்யும்?” என்று இதே கேள்வியை நடப்பு நிகழ்வுகளுக்கு தகுந்தாற்போல் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டு வருகிறார்.
இதுவும் கடந்து போகும் என்று நயன்தாரா பாணியில் சொன்னாலும், ரவுடி பேபி சாய்பல்லவி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இதுவும் ஒரு மாதிரி ஜாலியா தான் பீல் ஆகுது இல்ல!