நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க போகிறார் என நேற்று காலையில் செய்தி வெளியானது. இது உண்மையா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். கட்சியின் பெயர் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு விட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்னும் கட்சியை தான் ஆரம்பித்து இருப்பதாக விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என விஜய் அறிக்கை விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகர் இதுகுறித்து இன்று ஊடகங்களை சந்தித்து விளக்கம் அளித்தார். மறுபுறம் தான் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக நடிகர் விஜயின் அம்மாவும், எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் இன்று பேட்டி அளித்தார். இதனால் என்ன நடக்கிறது? என ரசிகர்கள் பலரும் குழம்பி போயினர்.
இந்த நிலையில் இயக்குநரும், தளபதி விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நமது பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு பிரத்தியேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அனைவரது வீட்டிலும் பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை இல்லாத குடும்பம் என யாருமே இல்லை. விஜய் விஷ வலையில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்,'' என தெரிவித்து இருக்கிறார். மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் தன்னுடைய பாணியில் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.