சமூக வலைதள பிரபலமும், நடிகையுமான லயா தனது மகனுடன் இணைந்து நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார்.
பிரபல இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம், 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
அதே போல முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு, சிறந்த பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை லயா தனது மகனுடன் அளித்துள்ளார்.
அப்போது தனது தந்தை பற்றி உருக்கமான கவிதை ஒன்றை லயா தனக்கென உரித்தான பாணியில் சொல்லியிருக்கிறார். மேலும், தன்னுடைய கவிதைகளில் இது மிகவும் பிடித்தது என்றும் அப்பாவை பற்றிய கவிதை என்றதும் தனக்கு இதுவே முதலில் ஞாபகத்திற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய லயாவின் மகன் வீட்டில் தான் செய்யும் குறும்புகள் குறித்தும் அதற்கு தனது அம்மாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது பற்றியும் பேசியிருந்தார். அப்போது,"வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்திருக்கும்போது குறும்பு செஞ்சா, ரூமுக்கு வா-ன்னு கூப்பிடுவாங்க. அப்போவே தெரிஞ்சிடும். அடிக்க தான் போறாங்கன்னு. வெளியே வரும்போது ட்ரெஸ் எல்லாம் சரி பண்ணிவிட்டுடுவாங்க. எல்லா நேரமும் அப்படி இல்ல. குறும்பு பண்ணா, அடி கன்ஃபார்ம்" என சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.
மேலும், தனது மகனை மிகவும் நேசிப்பதாகவும், அவனாலேயே தனக்கு தாய் என்ற பொறுப்பு கிடைத்ததாகவும் உருக்கமாக பேசியுள்ளார் லயா. தொடர்ந்து பேசிய சிறுவன்,"எனக்கு எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும். என்ன கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்திடுவாங்க" எனக்கூறி தனது தாய்க்கு முத்தமிட்டார். தொடர்ந்து தனது இளவயது வாழ்க்கை குறித்து மகனிடம் அடிக்கடி சொல்லியே வளர்ப்பதாக லயா தெரிவித்திருக்கிறார். மேலும், வயதில் சிறியவர்களோ, பெரியவர்களோ அவர்களிடத்தில் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என தனது அம்மா அடிக்கடி தன்னிடம் கூறுவார் என்றும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.