நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'தி லெஜண்ட்'. முன்னதாக நிறைய விளம்பரங்களில் தோன்றி மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த லெஜண்ட் சரவணன், 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கி இருந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ’தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின.
தி லெஜண்ட் திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய சூழலில், அடுத்து ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில், கடந்த (03.03.2023) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ஓடிடி ரிலீஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது லெஜண்ட் திரைப்படம்.
இதில் சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக தம்முடைய ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நாயகன் சரவணன் இருக்கும் அதே ஆராய்ச்சி கூடத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் & மயில்சாமி இடம்பெறும் காமெடி காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கு கேரள பெண் ஒருவரை காணும், விவேக், “இனி எண்ட சிஎம் பினராயி விஜயன், இனி எண்ட டைரக்டர் கௌதம் மேனன், எண்ட ஹீரோயின் நித்யா மேனன், சுந்தரி மேனன்” என்று கலகலப்பாக பேசுகிறார். பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன் திரைப்படத்தில் விவேக் பேசக்கூடிய, “ஓமனே.. இனி எண்ட ஸ்டேட் கேரளா, எண்ட ஐயன் திருவள்ளுவர்” என பேசக்கூடிய வசனம் மிகவும் புகழ் பெற்றது.
இந்த வசனத்தை நடிகர் ரீகிரியேட் செய்து பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. மறைந்த நடிகர் விவேக் இறந்த பின்னும், அவர் நலமுடன் இருக்கும்போது நடித்த லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவையாக நடித்திருப்பது ரசிகர்களை மேலும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.