59 வயதில் மறைந்த நகைச்சுவை நடிகர், சின்னக்கலைவாணர் பத்மஸ்ரீ டாக்டர். விவேக்கின் இறுதி அஞ்சலி அரசுமுறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முந்தைய தினம் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டபோது விவேக் பேசிய கடைசி பேச்சு வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தாம், எதற்காக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என விளக்கினார். அதில், “இந்த ஊசியை தனியார் மருத்துவமனையில் போடாமல் நானும் என் நண்பர்களும் ஏன் அரசு மருத்துவமனையில் ஏன் போட்டுக் கொண்டோம்? அரசு மருத்துவமனை பெரும்பாலான மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சென்று சேரும் மருத்துவ சேவையை அளிக்கிறது.
இந்த தடுப்பூசியைப் போட்டுக்கலாமா? பக்கவிளைவுகள் ஏற்படுமா? என மக்களிடையே வதந்திகள் உலவுகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதே சமயம் தடுப்பூசி போட்டதால் எந்த ஆபத்தும் இல்லை. பாதுகாப்பு உண்டு என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவே அரசு மருத்துவமனையில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். கொரோனாவுக்கு எதிராக நம்மை பாதுகாத்து கொள்ள மாஸ்க், கைகளை கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளே இதுவரை உள்ளன. ஆனால் மருத்துவ ரீதியான பாதுகாப்பு என தற்போது ஒன்று இருக்கிறது என்றால் இந்த தடுப்பூசி மட்டுமே.
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், விட்டமின் சி, ஜின்க் மாத்திரை எல்லாம் கூடுதல் பாதுகாப்புதான். ஆனால் அரசு மூலமாக வரும் தடுப்பூசிதான் நம்மை தொற்றில் இருந்து பாதுகாக்கும். இந்த ஊசி போட்டால் கொரோனா வராதா என்றால், வரலாம். ஆனால் வந்தாலும் தொற்றில் இருந்து நாம் பாதுகாக்கப் படுவோம். இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டால் பைக் ஆக்சிடண்ட் நடக்காதா என்பது போல் தான். நீங்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். அப்படிதான் இந்த ஊசியின் 2 டோஸ்களுக்கு பின்னர் 2 வாரங்கள் ஆன பின்னர் தான் இந்த ஊசி கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும், அந்த காலக்கட்டத்திலோ அதற்கு முன்போ கொரோனா தொற்று ஏற்பட்டால் ஊசி மீது பழி போடக் கூடாது! நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவரை கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதலை கடைபிடிக்க வேண்டும்.” என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.