தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ள சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
கடைசியாக, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, யசோதா, ஷகுந்தலம், குஷி உள்ளிட்ட திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். இதில், யசோதா படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சமந்தா பகிர்ந்திருந்த விஷயம் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த பதிவில், "யசோதா ட்ரைலருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது என்றும் உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் அன்பும், பிணைப்பும் தான் முடிவில்லாத சவால்களை சமாளிக்கவும் எனக்கு வலிமை தருகிறது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன், Myositis என்ற நோய் தனக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தனது பதிவில் குறிப்பிட்ட சமந்தா, இது குணமாக இன்னும் சில தினங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கையில் ட்ரிப் ஏறுவது போல புகைப்படம் ஒன்றையும் சமந்தா பகிர்ந்திருந்தார்.
தனது நோய் குறித்து சமந்தா பகிர்ந்த இன்ஸ்டா பதிவு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர், கியாரா அத்வானி, உள்ளிட்ட பல பிரபலங்களும் விரைவில் குணமடையும் படியும் கமெண்ட் செய்திருந்தனர். அதே போல, ரசிகர்களும் விரைவில் சமந்தா குணமடைந்து வரும்படி குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரான நடிகர் நாகசைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனியும் சமந்தாவின் உடல்நிலை விரைவில் குணமாக கமெண்ட் செய்துள்ளார். தெலுங்கில் பிரபல இளம் நடிகரான அகில் நடிப்பில் அடுத்ததாக Agent திரைப்படம் உருவாகி வருகிறது. நாகர்ஜூனாவின் மகனும், நாகசைதன்யாவின் இளைய சகோதரருமான அகில் அக்கினேனி Most Eligible Bachelor, Mr. Majnu உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர்.
தனது உடல்நிலை குறித்து சமந்தாவின் இன்ஸ்டா பதிவில் கமெண்ட் செய்த அகில், "All the love and strength to you dear Sam" என கமெண்ட் செய்துள்ளார்.