பிரபல வில்லுப்பாட்டு கலைஞரான சுப்பு ஆறுமுகம் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இசை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார் சுப்பு ஆறுமுகம். தன்னுடைய 14 ஆம் வயதிலேயே குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலம் மக்களிடையே பிரபலமானார்.
பழம்பெரும் நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் உதவியுடன் சென்னையில் தங்கி அமரர் கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை வில்லுப்பாட்டாக பாடினார். மேலும், என்.எஸ் கிருஷ்ணனின் 19 படங்கள் மற்றும் நாகேஷ்-ன் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார்.
காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை ஆகியவற்றை தனது வில்லுப்பாட்டாக பாடி மக்களிடையே பெரும்புகழ் பெற்றவர் சுப்பு ஆறுமுகம். இவருடைய இசை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மதியா அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதேபோல, கடந்த 2005 ஆம் ஆண்டில் சுப்பு ஆறுமுகத்திற்கு சங்கீத நாடக அகாடமி விருதை மத்திய அரசு அளித்து கவுரவப்படுத்தியது.
புகழ்பெற்ற வில்லுப்பாட்டு கலைஞரான சுப்பு ஆறுமுகம் மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.