உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இப்பொழுது தான் மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் மீண்டும் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா காலத்தில் மறக்க முடியாத நபராக மாறியவர் நடிகர் சோனு சூட். திரைப்படங்களில் வில்லனாக மட்டுமே அறிமுகமாகியிருந்த அவர் நிஜ வாழ்க்கையில் மக்களின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். சொந்த ஊர் திரும்ப முடியாமல் மாற்றிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கு தனது சொந்த செலவில் ஊர் திரும்ப வழி செய்தார். அப்போது ஆரம்பித்த தனது சேவையை அவர் இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறார்.
அவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூட்டிற்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்து பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினார்கள்