விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'பிக் பாஸ்'. இதற்கு முன்பு ஒளிபரப்பாகி இருந்த ஐந்து சீசன்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், நூறு நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது Finale கட்டத்தையும் எட்டி உள்ளது. விக்ரமன், ஷிவின், அசிம், மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் உள்ளிட்டோர் இறுதி சுற்று வரை முன்னேறி உள்ளனர். இவர்களுடன் Finale வரை முன்னேறி இருந்த கதிரவன், 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்து விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறி இருந்தார்.
அதே போல, முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களும் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் விருந்தினர்களாக வருகை புரிந்திருந்தனர். அப்போது பல நெகிழ்ச்சியான, கலகலப்பான தருணங்களும் அரங்கேறி இருந்தது. இதனிடையே, இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டியுள்ளதை அடுத்து ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் மனம் நெகிழ்ந்து பேசி இருந்தார் விக்ரமன். ஜிபி முத்து குறித்து பேசி இருந்த விக்ரமன், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த பனி விலகியதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டர், ராம் குறித்தும் தனது எண்ணங்களை விக்ரமன் வெளிப்படையாக பேசி இருந்தார். அந்த சமயத்தில் குறுக்கிட்ட ஷிவின், "ஒவ்வொருத்தவங்கள தான் பேசணும்ன்னு சொன்னாங்க" என கேட்டதும், "எனக்கு எல்லாரை பத்தியும் சொல்லணும்ன்னு தோணுது. இதுக்கு அப்புறம் இந்த வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியாது" என குறிப்பிட்டு அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் விக்ரமன் பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
அப்போது அசிம், ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் விக்ரமனை தொடர்ந்து பேசும்படியும் அறிவுறுத்தி இருந்தனர். தொடர்ந்து ஷிவினிடம் பேசிய அசிம், "ஷிவின் என்ன பிரச்சனை உனக்கு?" என்றும் கேட்டிருந்தார். இதற்கடுத்து ராம், ஷிவின், ரச்சிதா தொடங்கி அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் பேசி இருந்தார். அதே போல தான் அதிகம் பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்ட மணி, அசிம், ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் சிறந்த கருத்துக்களை பேசி நட்பை தொடர வேண்டும் என்றும் விக்ரமன் கூறி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் விக்ரமன் சக ஹவுஸ்மேட்ஸ் குறித்து பேசியுள்ள கருத்துக்கள், தற்போது பார்வையாளர்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.