விஜய்யின் 66-வது படம் குறித்து தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதனிடையே அடுத்து தனது 65-வது படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய், ஏ.ஆர்.முருகதாஸுக்கு கொடுத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பின் விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்தன. மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே தளபதி 66 படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணியிடம் இதுபற்றி கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது, ''விஜய் சாரை சந்தித்தது ஒரு சாதாரண சந்திப்பு தான். அவர் எதிர்காலத்தில் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம் என கூறினார். தற்போது எதுவும் உறுதியாகவில்லை. மேலும் இதை பற்றி இப்போது பேசுவது ரொம்பவே சீக்கிரமாக தெரிகிறது. ரசிகர்களை போலவே நாங்களும் உற்சாகமாக இருக்கிறோம். மெர்சல் கொடுத்த அதே மேஜிக்கை மீண்டும் கொடுக்க முடியும் என நம்புகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.