குட்டி ஸ்டோரி பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் பாடல் குறித்து பல அரிய விஷயங்களை பிஹைன்ட்வுட்ஸ் தளத்திற்காக பகிர்ந்து கொண்டார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் குட்டி ஸ்டோரி பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் பிஹைன்ட்வுட்ஸ்காக பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 'பாடலை முதலில் ஒரு ரைட்டராக எழுதி கொடுத்துவிட்டு, விஜய் பாடிய வெர்ஷனை நான் ரிலீஸ் ஆகி அனைவரும் கேட்கும் போது தான் முதலில் கேட்டேன். பாடலின் ட்யூனை கேட்ட போதே, இதை தளபதி பாடும் போது எப்படி இருக்குமோ என எக்சைட் ஆனேன். பாடலை கேட்ட அவர் ஃபோனில் அழைத்து பாராட்டினார். ஆனால் என்னால் பேச முடியவில்லை. அவர் குரலை கேட்டபோது பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்த பாடலின் முக்கிய கருவே பாசிட்டிவிட்டி தான். தற்போது இணையத்தில் நெகட்டிவிட்டி அதிகமாக பரவி வருவதை காண முடிகிறது. அப்படி இருந்தால் நம்மால் ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது. பாசிட்டிவான விஷயங்கள் மட்டுமே நம்மை முன்னேற்றும் என்பதை அழுத்தமாக சொல்லவே, இப்பாடலை இப்படி எழுதினோம். அதற்கு லிரிக் வீடியோவை அருமையாக செய்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. தளபதியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அப்போது அவருக்கு என்ன மாதிரியான கதையில் விருப்பமிருக்கிறது என்பதை பார்த்து, அதற்கு 100 சதவீதம் உண்மையாக உழைப்பேன்' என அவர் தெரிவித்துள்ளார்.