அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம்.தியாகராஜன் ஒரு திரைப்படக்கல்லூரி முன்னாள் மாணவர்.
திரைப்படக்கல்லூரியில் DFT படித்து இயக்குனர் வி.அழகப்பனிடம் பூப்பூவா பூத்திருக்கு படத்தில் உதவி இயக்குனராக அழகப்பனோடு பணியாற்றியவர். இளையதிலகம் பிரபு நடிப்பில் வெற்றி மேல் வெற்றி எனும் படத்தின் மூலம் இயக்குனரானார். பாக்ஸிங்கை மையமாக வைத்து இந்த படம் ஆக்சன் கலந்து குடும்பம், மனைவி சென்டிமெண்ட் என உருவானது. அடுத்து பின் 'மாநகர காவல்' படம் ஏவிஎம் தயாரிக்க விஜயகாந்த் நடிப்பில் உருவானது. இந்திராகாந்தியின் படுகொலையை அடிப்படையாக வைத்து உருவான மாநகரகாவல் பெரிய ஹிட் ஆனது.
பின்னர் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உறவினரோடு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்க்கப் போகும் போது விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு கோமாவுக்கு போகிறார். சில நாட்களுக்குப்பின் கோமாவிலிருந்து மீண்டு மீண்டும் சென்னைக்கு குடும்பத்தோடு வருகிறார். ஆனால் ஆறே மாதத்தில் மனைவி இறந்து விட குடும்பமும் கைவிட வடபழனி ஏரியாவில் அனாதையாக ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு எதிரில் நடைபாதையில் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டு சினிமாவுக்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய வடபழனி போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரின் மறைவு குறித்து சமூகவலைதளத்தில் பலர் பதிவிட்டுள்ளனர்.