நடிகர் விஜயகாந்த் நடித்த ‘மாநகர காவல்’ படத்தை இயக்கிய இயக்குநர் எம்.தியாகராஜன் ஏவி.எம்.ஸ்டுடியோவிற்கு எதிரில் அநாதரவான நிலையில் இறந்துகிடந்ததாக வந்த செய்தி திரைத்துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே உலுக்கி போட்டுள்ளது.
மக்களால் ‘கேப்டன்’ என அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் நடித்த 150 வது படத்தை யார் டைரக்ட் செய்ய, விஜயகாந்த் இவரை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு பின்னும், ‘பொண்ணு பார்க்கப்போறேன்’, ‘வெற்றி மேல் வெற்றி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம்.தியாகராஜன் திரைப்படக்கல்லூரியில் DFT படித்து இயக்குனர் வி.அழகப்பனிடம் ‘பூப்பூவா பூத்திருக்கு’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு கோமாவுக்கு சென்றதாகவும், அதன் பின்னர் அதில் இருந்து மீண்டதாகவும், பின்னர் மனைவி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி திரை வாய்ப்புகள் சரிவர கைவராத சூழலிலும் வடபழனியில் வாடகை தர முடியாத நிலையிலும், நண்பர்களின் அறை, அம்மா உணவகம் என வாழ்ந்து வந்த இவரது உடல்நிலை, கொரோனா சூழலில் பொருளாதார வீக்கத்தால் மோசமானதாக தெரிகிறது.
இந்த நிலையில், தான் இயக்கி வெற்றி பெற்ற ‘மாநகர காவல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டூடியோவின் எதிரிலேயே உயிரைவிட்ட சம்பவம் திரைத்துறையில் மீளா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.