தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய உடனேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து விஜயகாந்த்தின் உடல்நலத்துக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனிடையே தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி அறிய ஆவலாக இருந்தனர்.
இந்த நிலையில்தான் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையின்படி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காகவே சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஓரிரு நாட்களில் அவர் மருத்துமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அத்துடன் அவருடைய உடல்நலம் குறித்த வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம், அச்சப்படவும் வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கிறது. மேலும் விஜயகாந்த் கிட்னி தொடர்பான ஒரு பரிசோதனையை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
ALSO READ: தடுப்பூசி போட்டுக் கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ் நடிகையின் வைரலாகும் புகைப்படம்!