தளபதி விஜய் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியின் 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் தங்களது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
தமிழில் 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் 'வாராசுடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
வாரிசு படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் இணைந்து கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.
முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் ஒரு நீண்ட மற்றும் முக்கியமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் 100வது நாள் ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்தியேக தகவல்கள் தெரியவந்தன. பிறகு சென்னையில் உள்ள எண்ணூரில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய தகவல்களும் கிடைத்திருந்தன.
இந்நிலையில் தளபதி விஜய் கலந்துகொள்ளும் ரயில் பாடல் படப்பிடிப்பு சென்னை திருவேற்காட்டில் உள்ள பிரபல கோகுலம் ஷூட்டிங் ஹவுஸில் நடக்கிறது. 3 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், இந்த பாடல் காட்சியில் ஏகப்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகள் இடம்பெறுகின்றனர்.
நடிகர் விஜய் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தின் முதல் பாடலில் ரயிலில் பயணித்து அறிமுகமாவார். முழுக்க முழுக்க ஒரு ரயில் பாடலாக அமைந்த இந்த பாடலில் ராணுவ உடையில் தோன்றும் விஜய் ஆடிப்பாடுவதாக அந்த பாடல் அமைந்திருக்கும். இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் ஒரு ரயில் பாடலில் தோன்றவிருக்கும் தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இன்னொரு ட்ரீட்டாகவே இருக்கும் எனலாம்.