விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.
வடிவேல் பாலாஜி மதுரையை சேர்ந்தவர். அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். படிக்கும் போதே கால்பந்து விளையாட்டில் கவனம் போக படிப்பை கைவிட்டுள்ளார். அதன் பிறகு டான்ஸராக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அந்த துறையில் பணியாற்ற துவங்கியுள்ளார். அப்படி சின்ன சின்ன மேடை நிகழ்ச்சிகளில் ஆடிய அனுபவமும் இவருக்கு உண்டு.
வடிவேல் பாலாஜி என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர், வடிவேலு போல தன்னை மாற்றிக் கொண்டதற்கு பின்பு ஒரு சுவாரசியமான சம்பவம் உள்ளது. தனது நடன குழுவில் காதலன் படத்தில் வரும் ஊர்வசி பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்ற சூழல் வர, பிரபுதேவா வாக இவரது நண்பர் நடனமாட, மிகவும் கறுப்பாக இருந்ததால் அவரை வடிவேலுவாக தேர்வு செய்தார்களாம். இந்த ஸ்டைல் நமக்கு நல்லா வருகிறதே என்று அதே பாணியை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும் தனது வீட்டில் வசித்த பாட்டி ஒருவரை கிண்டல் செய்ய, அவரைப் போலவே பேசிய அவரின் குரல் வடிவேலு போலவே இருக்கிறது என்று கமெண்ட் அடிக்க. பாலாஜி, வடிவேல் பாலாஜியாக உருமாறியுளளார்.கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் இருந்த தனசேகர், லாரன்ஸ் என்பவர்களால் விஜய் டிவிக்குள் நுழைந்துள்ளார்.
அதன் பிறகு ஒரு நாள் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக விஜய் சேதுபதியை சந்தித்து பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறும்போது ஒருநாள் அது இது எது நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி வந்துள்ளார். கேரவேனில் விஜய் சேதுபதி அங்கே தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாலாஜியை பார்த்தவுடன் திடுக்கிட்டு எழுதியுள்ளார். உடனே வடிவேல் பாலாஜி அவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே நகர முயல, அவரை அழைத்த விஜய் சேதுபதி "நீங்கள் வேற லெவல் காமெடி பண்றீங்க. எப்படி இவ்வளவு டைமிங் சென்ஸ் உங்களுக்கு வருகிறது. உங்களுக்கு படம் நடிக்க ஆசை இருக்கிறதா. கவலைப்படாதீர்கள் நாம சேந்து பண்ணுவோம்" என்று அவர் கூற வடிவேல் பாலாஜி அந்த சம்பவத்தை மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
இப்படி பல பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் காமெடி ஜாம்பவானாக இருந்த வடிவேல் பாலாஜியின் மரணம் பேரிழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.