விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு மக்களிடையே மிகவும் பிரபலம்.
டிவி சீரியல்களுக்கு ஒருபக்கம் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ரியாலிட்டி ஷோக்களும் ட்ரெண்டாக இருந்து வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது உணர்வுபூர்வமான பல விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஸ்டார் கிட்ஸ் என்னும் ஒரு நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகை அறந்தாங்கி நிஷா, பிரபல பாடகி ராஜலட்சுமி, நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி சோனியா மூவரும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத நெருக்கடியை குறிப்பிட்டு உருக்கமாக பேசியிருக்கின்றனர். இந்த புரோமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதில் பேசிய அறந்தாங்கி நிஷா, தன்னுடைய பெண் குழந்தை தன்னிடம் வருவதே இல்லை என்று கண்கலங்குகிறார். இன்னொரு புறம் பேசிய ராஜலட்சுமி, தானும் தன் கணவரும் நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விடுவதால் குழந்தைகளை விட்டு விட்டு செல்லக் கூடிய சூழல் உருவாகிறது என்றும் குறிப்பிட்டு கண்கலங்கினார்.
போஸ் வெங்கட்டின் மனைவி சோனியா பேசும்போது மிகவும் விரும்பி, பெண் குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், தான் அவளுக்கு தாயாக இருப்பதில்லை என்றும் அவள்தான் தனக்கு தாயாக இருப்பதாகவும் கூறி அழ தொடங்குகிறார். உடனே சோனியாவின் மகளும் சேர்ந்து அழுவதை இந்த புரோமோவில் காணமுடிகிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் புரோமோவில் ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தாலும், இதில் கலந்து கொண்டுள்ள செலிபிரிட்டி தங்களுடைய வேதனைகளை உருக்கமாக பேசியிருப்பதும் இடம்பெற்றுள்ளது. இந்த புரோமோவின் முடிவில் விஜய் டிவி ராமர், ஈரோடு மகேஷ், விஜே பிரியங்கா பலரும் கண்கலங்குவதை காணமுடிகிறது.
Also Read: 'ஷாக்' ஆன ரசிகர்கள்!.. பிரபல சீரியலின் இந்த கேரக்டரில் இனி நடிக்கப் போவது இவரா?