தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். கடந்த ஆண்டு, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’பிகில்’ படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பெற்றது.
இந்த நிலையில் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும், ஃபைனான்சியர் அன்புசெழியனிடமும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நெய்வேலியில் நேற்று நடந்து கொண்டிருந்த ’மாஸ்டர்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருமான வரித்துறையினர் நேரடியாக சென்று, விஜய்க்கு சம்மன் வழங்கியதையடுத்து, விஜய் நெய்வேலியில் இருந்து சென்னை புறப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறையினர் பிகில் படத்தின் ஃபைனான்சியர் வீட்டில் நடத்திய சோதனை பற்றி வெளியிட்ட அறிக்கயில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளது. மேலும் சொத்து பத்திரங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருப்பதாகவும். இந்த விவகாரத்தில் 300 கோடி ரூபாய் அளவில் வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில் ஈசியாரில் விஜயின் பனையூர் வீட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. நடிகர் விஜய்யை நெய்வேலி ஷூட்டில் இருந்து சென்னை அழைத்து வந்தது வரை சுமார் 23 மணி நேரம் 30 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவலின்படி விஜய் மீண்டும் மாஸ்டர் ஷூட்டுக்காக நெய்வேலி திரும்பிவிட்டதாகவும் இன்று என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தில் ஷூட் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.