பெரிய ஹீரோக்களின் படம் வெளியாவது என்பது எப்போது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்காகவே தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களை குறி வைத்து மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரெடியாவது கோலிவுட்டில் வழக்கமான ஒன்று. அதே போல தமிழ் சினிமாவில் சம்மருக்கு ஒரு தனி மவுசு எப்போதுமே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட எக்சாம் எல்லாம் முடிந்து, பக்காவாக இரண்டு மாத விடுமுறை. பெரிதாக சினிமா தியேட்டருக்கு போகாதவர்கள் கூட, குழந்தைகளை சம்மர் லீவில் சினிமாவுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையை ப்ளான் செய்து பல படங்கள் வந்த வன்னம் இருக்கின்றன. அதில் சில படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கின்றன. சில படங்கள் சுவடே தெரியாமல் காணாமல் போகின்றன.
அப்படியான இந்த வருடத்தின் சம்மர் லீவைதான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் டிக் அடித்திருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை, தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் விக்ரம் தான். விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்த போதே, படம் சம்மருக்கு வருவதாக அறிவித்துவிட்டனர். அதே போல சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் சம்மரை ரிலீஸுக்கு லாக் செய்திருக்கிறது. சரி, இந்த ரெண்டு படங்கள் தான் இந்த வருட சம்மர் ட்ரீட் என ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தான் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படம் மே மாதம் முதல் தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கிறார். ஸ்டைலிஷாக உருவான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இத்திரைப்படமும் சம்மருக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான போஸ்டரில், மே 2020 என படக்குழு ரிலீஸ் தகவலையும் வெளியிட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் இந்த நால்வரின் படங்களும் வரும் கோடை விடுமுறையைதான் டார்கெட் செய்துள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும் இத்திரைப்படங்கள் யாவும் சம்மர் ரேஸுக்கு பக்காவாக ரெடியாகியுள்ளன. இதில் யார் வெல்ல போகிறார் என்பதை தாண்டி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த சம்மரில் செம விருந்து காத்திருக்கிறது. அதுவரை எதிர்ப்பார்ப்புகளோடு எப்போதும் போல... காத்திருப்போம்!