தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் ரிலீசாவதில் இருக்கும் பிரச்சனை குறித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீசாகாத நிலையில், நாளை (ஜூன்.27) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, ‘சிந்துபாத்’ படத்தின் ரிலீஸ் பிரச்சனை குறித்து தனது கருத்தினை பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.
அவர் கூறுகையில், ‘சமீபகாலமாக படங்கள் ரிலீஸ் ஆகுறதே பெரிய பஞ்சாயத்தா இருக்கு. படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகவிருக்கும் கடைசி நிமிடம் வரைக்கும் டிராமா நடக்கிறது. 96 படத்தின் ரிலீஸ் பிரச்சனை மூலம் நிறைய விஷயங்கள் பாடமாக இருந்தது. ஒரு படத்துக்கு பண பிரச்சனை என்றால் அதன் ரிலீசை நிறுத்தி வைக்கிறார்கள்’.
‘அந்த படங்களை எதிர்ப்பார்ப்பு இருக்கும் நேரத்திலேயே ரிலீஸ் செய்தால், அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு தயாரிப்பாளர்கள் கடன் பிரச்சனையை தீர்க்கலாம். பலரிடம் இது பற்றி கேட்டுவிட்டேன் ஆனால் விடை இல்லை. நான் இப்போ தான் வந்தேன் எனக்கே இவ்ளோ விஷயங்கள் தெரியும் போது பெரிய மனுஷங்களா இருக்க பலரும் இதை ஏன் கண்டுக்காம இருக்காங்கன்னு தெரியல’ என விஜய் சேதுபதி கூறினார்.