‘ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், அஷ்வந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும், இதில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.
ஆனால், இப்படத்தில் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பிரத்யேகமாக Behindwoods-க்கு அளித்த பேட்டியில் ‘சூப்பர் டீலக்ஸ்’ விமர்சனம் குறித்து பேசியுள்ளார்.
Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியின் 500வது எபிசோட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி தனது படங்கள் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கைகள் குறித்து எழுந்த சர்ச்சை பற்றி பேசிய அவர், இந்த படத்தில் அவர்களை உயர்வாக காட்ட வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது. அவர்களுக்கு விளக்கம் கொடுக்க விரும்பினோம் ஆனால் அவர்கள் அதை கேட்கக் கூட தயாராக இல்லை.
எனக்கு அவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. திருநங்கைகள் மீது எப்போது எனக்கு இருக்கும் அன்பு மாறாது. சமூகத்தை தான் சாடினோம், திருநங்கைகளை அல்ல. அது மக்களுக்கு புரிந்தது, ஒரு சிலருக்கு புரியவில்லை. படத்தில் சொன்ன விஷயம் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.’ என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படம் நாளை (ஜூன்.21) உலகம் முழுவதும் ரிலீசாகிறது.