நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படம் இன்று ஜனவரி 13 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் அப்பொழுது அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் சற்றே கடுப்பாகி கூறிய பதில்கள் இதோ.
அப்போது நிருபர் ஒருவர் '800' பட சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பிய போது "திருந்தவே மாட்டீங்களா அது முடிஞ்சு போச்சு. படம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. அதை ஏன்டா திரும்பவும் பேசுற" என்பதுபோல் கூறியுள்ளார். மேலும் மற்றொரு நிருபர் "மாஸ்டர் விஜய் சேதுபதியின் படம் என்பது போல் சிலர் கூறுகிறார்களே' என்று கூறியவுடன், "இந்த கேள்வியே தேவை இல்லாத கேள்வி. அது விஜய் சாரால் மட்டும்தான் இவ்வளவு அழகாக வந்திருக்கிறது. நான் திரும்பி கேள்வி கேட்டவுடனே சிரிக்கிறீங்களே" என்பதுபோல கூறியுள்ளார். மேலும் "இப்பொழுது நடக்கக்கூடிய அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு "நான் ஓட்டுப் போடுவதற்கு எப்படியோ அப்படியே தான் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் துக்ளக் தர்பாரில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இருக்குமா என்ற கேள்விக்கு "இனிமேல் கதையை சொல்லிவிட்டு தான் படம் எடுக்க வேண்டும் போல. படம் வந்தா தானே தெரியும். எங்களுக்கு என்ன பிரச்சனை செய்வதற்காக படம் எடுக்கப் போகிறோம். மக்களை மகிழ்விக்க தான் படம் எடுக்கிறோம். அப்படிப்பட்ட சர்ச்சைகள் எங்களுக்கு தேவையில்லாத வேலை" என்று கூறியுள்ளார்.