தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்று சொல்லக்கூடிய பெப்சி தொழிலாளர்களுக்கு பையனூரில் 65 ஏக்கர் நிலம் கொடுத்து, அதில் வீடுகட்டுவதற்கு தமிழக அரசு இடம் வழங்கியிருந்தது.
இதுகுறித்து, முன்னதாக பேசியிருந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “அரசு வழங்கிய நிலத்தில், 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடியும் என்பதால், முதல்கட்டமாக 1000 ஆயிரம் குடியிருப்புகள் கட்டவிருக்கிறோம். அனைத்து நடிகர்கள், தொழிற்சாலைகள் பணியாளர்கள் என அனைவருக்கும் இங்கு ஒரே இடத்தில் வீடுகள் அமைத்து, இதனை திரைப்பட நகரமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கி விஜய் சேதுபதி, இந்த நிகழ்வில் பேசும்போது, “பெப்சி தொழிலாளர் சம்மேளனத்திற்கு சரியான தலைவர் கிடைத்திருக்கார்” என்று ஆர்.கே.செல்வமணிக்கு புகழாரம் சூட்டி பேச்சைத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், “பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் பணிக்காக நன்கொடை தருவதாக நான் கூறி, ஒரு வருடம் ஆனது. பின்னர் மனதில் இதுதொடர்பான சஞ்சலம் இருந்தது. பின்னர் ஒரு விளம்பரப் படத்திற்காக வந்த பணத்தை கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்தேன். ஒவ்வொருமுறை படம் பண்ணும் போதும், அந்தப் படத்துக்காக வரும் பணம் கடன்காரர்களுக்கு போய்விடுகிறது. எனவே இந்த முறை அப்பணத்தை பெப்சிக்காக கொடுத்து விடலாம் என முடிவு செய்தேன்.
நான் கொடுத்த பணம் இந்த மொத்த தொகையில் ஒரு புள்ளிதான். ஆர்.கே.செல்வமணி முன்னெடுக்கும் இது மிகப்பெரிய ஒரு கனவு மற்றும் முயற்சி. இது சிறப்பாக தொடங்கி நடக்க வேண்டும். தொழிலாளர்கள் இந்த குடியிருப்பில் குடியிருக்கும் காலம் விரைவில் நடக்கும் என நம்புகிறேன். அது ஒரு சரியான தலைவர் செல்வமணி மூலமாக நடக்கப்போகிறது. நானும் அதை முழுசாக நம்புகிறேன். அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர், “இந்த 1 கோடி ரூபாயுடன் நான் நிறுத்தப்போவதில்லை. நான் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்தேன். நான் சினிமாவுக்கு வந்த முக்கியமான காரணமே, எங்க அப்பாவுடைய கடன் 10 லட்ச ரூபாய் இருந்தது. சின்ன வயசிலிருந்து படம் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. நீண்ட வருடங்களாக நான் துபாயில் சென்று சம்பாதித்து அந்த கடனை அடைத்து பார்த்தேன். வட்டிதான் அதிகமானதே தவிர கடன் தொகை குறையவில்லை. 20-ஆம் தேதி ஆனால் அடுத்த பத்து தேதிக்குள் வீட்டு வாடகை கொடுப்பது எப்படி என்கிற சிந்தனைதான். ஒவ்வொரு மாதமும் வாடகை ஏறும். விலைவாசி ஏற்றத்தை விட வாடகை ஏறும் போது எங்களுக்கு பக்கு பக்கு என்று இருக்கும்.
எனவே சொந்த வீடு வாங்க வேண்டும். அப்பாவின் கடனை அடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் சினிமாவுக்கு தெரியாமல் வந்தேன். இது தெரியாமல் நடந்தது தான். மற்றபடி சினிமாவுக்கு வர வேண்டும் என்கிற எந்த ஆசையும் கனவும் எனக்கு கிடையாது. வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் பாகிஸ்தானில் வீடு கட்டி குடி இருப்பது போலவே ஹவுஸ் ஓனர் போடுகிற கண்டிஷன்களை பார்க்கும் பொழுது குடியிருப்பு வாசிகளுக்கு இருக்கும்.
நான் நடித்த ஆண்டவன் கட்டளை என்கிற படத்தில் கூட இது தொடர்பான காட்சிகள் வரும். துணி காய போட கூடாது. சுவற்றில் ஆணி அடிக்க கூடாது என என்னென்னவோ கண்டிஷன் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரக்கூடாது. வந்தால் உடனே சென்று விடவேண்டும். அவர்கள் நம் வீட்டில் குளிக்கக் கூடாது என ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் இருக்கும்.
சொந்த வீடு கனவு என்பது மெட்ராஸில் இருக்கும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆசை. அந்த ஆசை மற்றும் கனவு செல்வமணி சார் மூலமாக பெப்ஸி தொழிலாளர்களுக்கான நடத்தி வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு சிறப்பாக தொடங்கி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன் தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என அடுத்தடுத்து 3 திரைப்படங்கள் கடந்த ஒரே மாதத்தில் வெளியாகின.