சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் (Vijay makkal iyakkam) போட்டியிடுகின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய இவர்கள் இந்த தேர்தலிலும் வெற்றி வாகை சூட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னத்தை வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆட்டோ சின்னம் தர மறுப்பு
விஜய் மக்கள் இயக்கத்தினர் முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. உள்ளாட்சி தேர்தலை போன்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனது பெயரையும், போட்டோவை பயன்படுத்தி கொள்ளலாம் என்று விஜய் அனுமதி அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்மன்ற தேர்தலில் மொத்தம் 22 இடங்களில் போட்டியிடுகின்றனர். சிவகாசி மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம்
அதேபோல், ராஜபாளையம் நகராட்சியில் 8 பேரும், சாத்தூர், விருதுநகரில் தலா 5 பேரும் அருப்புக்கோட்டையில் ஒரு வேட்பாளரும், வத்ராயிருப்பு, மம்சாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முதல் முறையாக நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம் மீது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கவனத்தை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி
இதுதொடர்பாக விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜயின் உத்தரவின் படி 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.
எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைகளும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, 'தளபதி' மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை , மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.