ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அதிகாரத்தில் இருந்துகொண்டு அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை மக்கள் படையை திரட்டி எதிர்கொள்ளும் புரட்சியாளர் கேரக்டரில் வயதான விஜய் சேதுபதி, பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரில் வருகிறார். குறிப்பாக பெண்களை விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தியவர்களை எதிர்கொள்கிறார்.
இதனிடையே புதிதாக ஆயுதப்படை காவல் பிரிவில் சேரும் நடிகர் சூரி, தன் முயற்சியால் எப்படியேனும் சாதிக்க நினைக்கிறார். ஆனால் அவரை அங்குள்ள போலீஸாரே தரம் தாழ்த்தி ஒடுக்கி நடத்துகின்றனர். இறுதியில் சூரியின் நிலைப்பாடு என்ன? விஜய் சேதுபதி காவல்துறையினரால் எண்டகவுண்டர் செய்யப்பட்டாரா? என்பதை நோக்கி கதை செல்வதாக டிரெய்லர் மூலம் அறியப்படுகிறது.
இந்த டிரெய்லரின் இறுதிக் காட்சிகளில், “மனுஷன் பொறக்கும் போதே அவன் பிறப்பை வைத்து பிரிக்கிற நீங்க பிரிவினை வாதிகளா? இல்லம் நாங்க பிரிவினை வாதிகளா?” என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் ட்ரெண்ட் ஆகிவருகிறது.