பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்யா தற்போது உயிரிழந்துள்ள சம்பவம், தமிழ் திரையுலகினர் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49.
Also Read | RIP Bamba Bakya: "மாபெரும் இழப்பு" - பாடகர் பம்பா பாக்யா மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்.!
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விக்ரம் - பிரிதிவ்ராஜ் நடிப்பில் மணிரத்னம் இயக்க ராவணன் திரைப்படத்தில் இருந்தே பாடிவந்தவர் பாடகர் பம்பா பாக்யா. இவர் பின்னர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை விவேக் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எந்திரன் 2.0 படத்தில் வரும் புள்ளினங்காள் பாடல், சர்வம் தாள மயம் படத்தில் வரும் பாடல்கள் என பல பாடல்களை பாடிய இவர், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலமே காலமே' என்கிற உருக்கமான பாடலை பாடியிருப்பார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வரலாற்று புனைவு திரைப்படமான, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகின.
அதில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய பொன்னி நதி பாடலில் வரும் தொடக்க வரிகளை பம்பா பாக்யா தான் முதலில் பாடியிருப்பார். அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரிஹானா மற்றும் அவரை தொடர்ந்து முதன்மை பாடகராக அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இருப்பார். இது தவிர இன்னொரு பாடலையும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடியிருக்கிறார் பம்பா பாக்யா. இந்நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா உயிரிழந்துள்ளார். அவருடைய இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையில் மரணமடைந்த பம்பா பாக்யாவின் இறுதிச்சடங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு, அவரது பிரேதத்தின் அருகில் நின்று துக்கம் அனுஷ்டித்தார். பம்பா பாக்யாவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பாக்யாவின் இறப்பை தாளாமல் துக்கத்தில் இருந்தனர். பாக்யாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரிடம் தமது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான், அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆறுதலையும் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடிவந்த பம்பா பாக்யா, இன்னும் பிற இசையமைப்பாளர்களுக்கும் பாடியுள்ளார். குறிப்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் உருவான ‘ராட்டி’ எனும்தனியிசை பாடலி ‘அடி எதுக்கு ஒன்ன பாத்தேன்னு’ எனும் பாடலை பாக்யா, மிகவும் உற்சாகமாக பாடியிருப்பார். இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியும், பம்பா பாக்யாவின் மறைவு குறித்த தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Also Read | Bamba Bakya: "இந்த பேரும் காஸ்டியூமும் ரஹ்மான் சார் கொடுத்தது..!" - பாடகர் பம்பா பாக்யா நினைவலைகள்.