ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியை அளித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நான் இதுவரை ஒரு குறும்படம் (பாவக்கதைகள் படத்தில் ஒரு குறும்படம்) உட்பட ஆறு படங்கள், இல்லை இல்லை ஐந்தரை படங்கள் (வாடிவாசலை தவிர) இயக்கி விட்டேன். ஒரு திரைப்படத்தில் கூட தயாரிப்பாளர்கள் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏதாவது கேள்விகள் கேட்டால் தானே என்று எனக்கே தோணும்.. ஆனால் தனுஷ் படத்துக்கு பிறகு ஒரு சிறிய படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். தனுஷ் தயாரித்தார். அவரிடம் கதை சொல்லும் போது கூட, ‘இல்லை வேண்டாம். கதையில் நான் இன்ஸ்பிரேஷன் ஆனால் அப்புறம் எனக்கு நடிக்க வேண்டும் என்று தோன்றும், அதனால் கதை சொல்ல வேண்டாம்’ என்று சொல்லி தயாரிப்பு மட்டும் செய்தார். அவர் கடைசி வரை கதையை கேட்கவில்லை.
தற்போது விடுதலை எப்படியோ ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் எல்ரெட் குமார் மிகவும் உறுதுணையாக இருந்தார், நான் உண்மையில் அதற்குண்டான நியாயம் செய்து விட்டேனா என்றால் அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் சாத்தியமாக்கியவர்கள்’ அவர்கள் என்று குறிப்பிட்டார்.