சென்னை, 02, பிப் 2022:- இயக்குனர் வெற்றிமாறன் 21-ஆம் நூற்றாண்டு தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையாக உருவெடுத்து வருபவர். ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் தொடங்கி அவருடைய திரைப் பயணம் ‘ஆடுகளம்’ மற்றும் ‘அசுரன்’ திரைப்படங்களில் தேசிய விருதுகள் வாங்கும் அளவுக்கு கொண்டு சென்றது.
விருதுகளும் வெகுஜன அங்கீகாரமும்
இவற்றுள் ‘ஆடுகளம்’ திரைப்படம் ஆறு தேசிய விருதுகளையும், ‘அசுரன்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றதுடன் வெகுஜன மத்தியில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும் பெற்ற முக்கிய திரைப்படங்களாவன. இதேபோல் வடசென்னையை கதைக்களமாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசன்னை’ திரைப்படத்தில் பார்வையாளர்களுக்கு வேறொரு பரிமாணம் கிடைத்தது. வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படமும் அப்படித்தான், ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்றது.
‘அசுரன்’ மற்றும் ‘வடசென்னை’
‘அசுரன்’ மற்றும் ‘வடசென்னை’ இரண்டு திரைப்படங்களிலும் வெற்றிமாறன் பீரியட் கதைகளை பொருத்திப் பார்த்தார். இவற்றுள் ‘அசுரன்’ திரைப்படத்தில் ‘காலகட்டம் முரண்’ என்கிற திரைப்பதத்தை கையாண்டும் பார்த்தார். அதாவது எடுத்துக் கொண்ட கதைக்களத்துடன் பொருந்திப்போகும் வெவ்வேறு காலகட்ட நிகழ்வுகளை ஒரே டைம் லைனில் இணைத்து, ஒரே காலகட்டத்தில் நடப்பதாக கதை சொன்னார். ஆக, தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் ‘வடசென்னை’ இரண்டு திரைப்படங்களிலும் முந்தைய மற்றும் நிகழ்காலத்துக்கு கதை சென்று வருவதை காண முடியும்.
விடுதலை, வாடிவாசல்
தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகியோரின் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இசைஞானி இளையராஜா இந்த திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு முதல் முறையாக இசையமைக்கிறார். இதேபோல், தமிழ் மரபின் முக்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து, ‘வாடிவாசல்’ எனும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.
வெற்றிமாறனின் ‘ராஜன்’
இயக்குநர் வெற்றிமாறனின் ‘வடசென்னை’ திரைப்படத்தில் ராஜன் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அமீர். இயக்குனராக மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் என பல திரைப்படங்களை இயக்கிய அமீர், நடிகராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது இயக்குனர் அமீர் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைவதாக ஒரு புதிய தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஒளிப்படத்தில் வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகிய இருவருடன் மூன்றாவதாக ஒரு நபர் நிற்பதைக் காணமுடிகிறது. அவர் யார் என்று தீவிர திரைப்பட ரசிகர்கள் ஆர்வமாய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யார் அந்த மூன்றாவது நபர்?
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த மூன்றாவது நபரின் பெயர் தங்கம். இவர் தமிழ் சினிமாவின் அரியதொரு இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் துணை இயக்குநர் ஆவார். ஆம், பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்த இயக்குநர் வெற்றிமாறனின் சீனியர் தான் தங்கம். இவரைப்பற்றி இயக்குநர் வெற்றிமாறன் தான் எழுதிய மைல்ஸ் டூ கோ எனும் தொடர் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மூத்த அண்ணன் போன்றவர்
இதேபோல் அசுரன் திரைப்படம் வெளியான பின்னர் கலைஞர் டிவியின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வெற்றிமாறன் பற்றி தங்கமும், தங்கத்தை பற்றி வெற்றிமாறனும் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தனர். அதில் தனக்கு ஒரு மூத்த அண்ணன் போன்றவர் தங்கம் என்று இயக்குனர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். மேலும், தொடர்ந்து தங்கத்திடம் இருந்து 15,20 ஆண்டுகளாகவே அரசியல், தத்துவங்களை நாங்கள் பயின்று கொண்டிருப்பதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.
புதிய அறிவிப்பு
இவை தவிர, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படத்தின் மூல நாவலான லாக்கப் நாவலை எழுதிய மு.சந்திரகுமார், தங்கம் என்பவரின் நண்பர்தான். இதேபோல், ‘அசுரன்’ திரைப்படத்தின் மூல நாவலான பூமணியின் ‘வெக்கை’ நாவலை வெற்றிமாறனுக்கு அறிமுகப்படுத்தியவரும் தங்கம்தான். இப்படி பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த தகவல்களுக்கு உரியவர் தங்கம்.
இந்த நிலையில்தான் தங்கம், இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கைகோர்க்க கூடிய இந்த புதிய தகவல் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது திரைத்துறையில் பெரும் அதிர்வை உண்டுபண்ணி இருக்கிறது.