தமிழ், மலையாளாம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், அம்மாநிலத்தின் சிறந்த நடிகைக்கான விருதும், ‘மிஸ் லீலாவதி’ என்கிற கன்னட படத்தில் சிறுவயது பெண்ணாக நடித்ததற்கு தேசியவிருதும் பெற்றுள்ளார். அத்துடன், தனது தனிப்பெரும் நடிப்பால் மேலும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர் மேற்கண்ட மொழிகளில் 500-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் புன்னகை, வெள்ளிவிழா, கண்ணா நலமா, இருகோடுகள், பாமாவிஜயம், எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 76 வயதாகும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தான் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இழப்பு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஜெயந்தி மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.