பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி (72) மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
தமிழில், ‘சாரதா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, எம்.ஜி.ஆரின் ‘தாயின் மடியில்’, ‘பணம் படைத்தவன்’, ‘அன்னமிட்ட கை’, நடிகர் திலகம் சிவாஜியின் ‘நெஞ்சிருக்கும் வரை’, ஜெமினியின் ‘கங்கா கவுரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகை கீதாஞ்சலி நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஹைதாராபாத்தில் வசித்து வந்த நடிகை கீதாஞ்சலி கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று (அக்.31) காலை உயிரிழந்தார். இவரது கணவர் ராம்கிருஷ்ணனும் திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கீதாஞ்சலி கடைசியாக தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘தட் இஸ் மகாலக்ஷ்மி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம், பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘குயீன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது.