கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தமது ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பலவருடம் முன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் இருவரும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினியிடம் பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் விக்ரம் திரைப்படத்தை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில், “நீங்கள் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றால் என்ன மாதிரி ஒரு கதையை பண்ணுவீர்கள்.?” என கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் சொன்ன இயக்குநர் வெங்கட் பிரபு, “விக்ரம் பார்ட் 2 பண்ணனும். எனக்கு அந்த ஜானர்ல அந்த மாதிரியான படம் அவருக்கு பண்ணணும்.. இண்டியானா ஜோன்ஸ் மாதிரிலாம்.. ” என சொல்கிறார்.
விக்ரம் பார்ட் 2 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். முன்பே விக்ரம் 2-ஆம் பாகத்தை எடுப்பதற்கு வெங்கட் பிரபு யோசித்திருக்கிறார், டிவி சேனலில் சொல்லியிருக்கிறார் என்கிற இந்த தகவலை, வீடியோவுடன் இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, கடைசியாக சிம்பு நடிப்பில் மாநாடு, அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து தற்போது, நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தம்முடைய 11வது படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு.