சென்னை: மாநாடு படம் பற்றி ரசிகர் ஒருவர் செய்த விமர்சனத்துக்கு வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார்.
2021 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்க, V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையும், வில்லன்களால் நீதிக்கு துரோகம் செய்து, அழிவுச் செயல்களில் ஈடுபடும்போது, பிரபஞ்ச விதிகள் எப்படி உடைந்து போகின்றன என்பதே மாநாடு கதை. இந்த படம் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மாநாடு படத்தில் சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். மாநாடு படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை தொகைக்கு கைப்பற்றியுள்ளது. 50 நாட்கள் இந்த படம் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.
இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரன், மாநாடு திரைப்படம் குறித்து, ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். அந்த வீடியோவில் பேசும் ரசிகர், 'கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மாநாடு திரைப்படம், எனக்கு பிடிக்கவில்லை. திரும்ப திரும்ப ஒரே சீன் வந்து கொண்டே இருப்பதால், தலைவலி தான் ஏற்படுகிறது. அதில் கதையே இல்லை' எனவும், 'என்னிடம் இது டைம் லூப் கதை என யாருமே கூறவில்லை' என அந்த ரசிகர் தெரிவிப்பார். அந்த வீடியோவை பகிர்ந்த பிரேம்ஜி அமரன், இயக்குனரும் தனது அண்ணனுமான வெங்கட் பிரபுவை டேக் செய்து இருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள வெங்கட் பிரபு “எல்லாருடைய விமர்சனங்களையும் நாம் சரியான முறையில் ஏற்றுக் கொள்வோம் பிரேம். சரியோ! தவறோ, நாம பார்க்காத விமர்சனமா? அடுத்த படம் இவருக்கும் புடிக்கிற மாதிரி புரியுற மாதிரி எடுக்க முயற்சி செய்வோம்” என்று அந்த பதில் டிவீட்டில் கூறியுள்ளார்.