அண்மையில் நடந்த விபத்து குறித்து உருக்கமான பல பதிவுகளை தமது சமூக வலைதளங்களில் பதிவிட்ட யாஷிகா ஆனந்துக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆறுதல்களையும் ஆலோசனைகளையும் ட்விட்டரில் வழங்கியுள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர், தமிழ் திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த வாரம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது ஈசிஆர் சாலையில் யாஷிகாவின் கார் விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் தீவிர அடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி, காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானார். பின்னர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்வரை சிகிச்சையில் இருந்த யாஷிகா, மருத்துவமனையில் கண்விழித்த பின்னர், தனது தோழியின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதில் யாஷிகா, “நான் இப்போது அனுபவிக்கும் மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் வாழ போகிறேன்.. ஒவ்வொரு நொடியும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பேன் பவானி” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே பலரும் யாஷிகா மீது சமூக வலைதளங்கள் வாயிலாக விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கும் ரியாக்ட் செய்த யாஷிகா, “ஒவ்வொரு நொடியும் என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கும் சோஷியல் மீடியாவுக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில், “டார்லிங்... யாருக்கு வேண்டுமானாலும் இவ்வாறு நடக்கும். எனவே தான் அதை விபத்து என்று நாம் குறிப்பிடுகிறோம். பிறப்பு இறப்பு எல்லாமே முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விட்டது. யாராலும் அதை மாற்ற முடியாது. உன்னுடைய கட்டுப் பாட்டில் இல்லாத ஒரு விஷயத்துக்காக நீயே உன்னை குற்றம் சொல்லிக் கொள்வதை நிறுத்து.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நீ தெளிவாக இரு. நல்லபடியாய் ஓய்வெடு, உடல் நலத்தில் அக்கறை செலுத்து. இந்த விபத்தில் நீ நலமுடன் பிழைத்ததற்கு அர்த்தம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் டார்லிங்” எனத் தெரிவித்துள்ளார்.