Max hair

தமிழுக்கு தீங்கு வந்தால்... வெகுண்டெழுந்த வைரமுத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

11, 12ம் வகுப்பு மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை மாணவா்கள் தோ்வு செய்யலாம் என்ற தகவல் பரவியதற்கு கவிஞா் வைரமுத்து கடும் கண்டனம் தொிவித்துள்ளாா்.

vairamuthu warns tamilnadu government

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா?
தொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள்.

தமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா? பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஏதேனும் ஒரு மொழிப் பாடத்தை மாணவா்கள் தோ்வு செய்து படிக்கலாம் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.

Vairamuthu warns tamilnadu government

People looking for online information on Kaviperarasu Vairamuthu will find this news story useful.