நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்த தகவலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஹீரோவாகவும் தம்முடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆக்டிவாக ஆரம்பித்த வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். லைகா தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் சிறப்பு மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது.
வடிவேலுவின் குரல் பின்னணியில் ஒலிக்க, செம்ம மாஸாக வெளியான இந்த மோஷன் போஸ்டர் அனைவரிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
லண்டன் பயணம்
இந்தப் படத்தின் பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கின. இதனிடையே இந்த திரைப்படத்துக்கான இசையமைப்பு பணிகளுக்காக வடிவேலு படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
வடிவேலுவுக்கு கொரோனா உறுதி
இந்த பணிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் நடிகர் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடிவேலுவின் உடல் நிலை குறித்து, தற்போது அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
உடல்நிலை சீராக இருக்கிறது!
இந்த அறிக்கையில், “நடிகர் வடிவேலுவுக்கு, கடந்த 23-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருடைய உடல்நலம் தேறி வருகிறது. அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த வடிவேலு ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.
Also Read: “எனக்கு ஜெயிக்கவே வேண்டாம்” .. சஞ்சீவ், பிரியங்காவின் சரமாரி கேள்வி.. தாமரை சொன்ன பதில்!