நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லைகா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கின்றன. இதனிடையே சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது நாய் சேகர் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.
நடிகர் வடிவேலு, இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி திரைப்படத்தின் பிரச்சினை காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் நடிகர் வடிவேலு திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்கும் முதல் இரண்டு படங்களில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஒரு திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்துக்கு நாய் சேகர் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சுராஜ் மற்றும் வடிவேலு தரப்பில் முதலில் கூறப்பட்டது.
இதனிடையே ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு நாய் சேகர் என்று தலைப்பு வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்ததுடன் வடிவேலு சாரின் ரசிகராக அதை பகிர்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தற்போது ஒரு விழிப்புணர்வு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசும்போது, அவரிடம் கேட்கப்பட்டது.
முன்னதாக டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாவதாக இந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கும் டாக்டர் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த நிலையில், இந்த திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் நேரடியாக வெளியாகிறது. இந்த அறிவிப்பையும் சிவகார்த்திகேயன் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கொடுத்திருந்தார்.
அதன் பின்னர் நாய் சேகர் தலைப்பு குறித்து பேசும் போது, “நானும் சதீஷும் இது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். நாய் சேகர் தலைப்பை வடிவேலு சார் படக்குழுவினர் பயன்படுத்தப் போவதாக அறிந்ததுமே, இந்த படம் கிட்டத்தட்ட நாம் முடித்து விட்டோமே? படம் முழுவதும் நாய் சேகர் தலைப்பை பயன்படுத்தி இருக்கிறோமே? என்று சதீஷ் என்னிடம் பேசினார்.
பிறகு நாங்கள் இதுகுறித்து வடிவேலு சாரிடம் பேசினோம். வடிவேல் சார் வேற டைட்டிலில் இப்போது போவதாக குறிப்பிட்டிருக்கிறார். சதீஷ் புதிதாக இந்த பெரிய படத்தில் நடிப்பதால், இப்படி ஒரு டைட்டில் தேவைப்படுகிறது. ஆனால் வடிவேல் சார்க்கெல்லாம் இப்படி ஒரு டைட்டில் தேவைப்படாது. அவருக்கு என்ன டைட்டில் வைத்தாலும் அது பயங்கரமாக தான் இருக்கும்.” என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் டாக்டர் திரைப்படத்திற்கு ஏன் தமிழில் மருத்துவர் என்று பெயர் வைக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டபோது, “எனக்கும் தமிழுக்குமான உறவு எனக்கு தெரியும். வெகுஜன மக்களிடையே எளிதில் படம் ரீச் ஆக வேண்டியதற்கான டைட்டில் பார்க்கிறோம். ஒரு திரைப்படத்தின் டைட்டில் நம்முடைய தமிழ் பற்றை முடிவுசெய்யாது.
நானும் ஒவ்வொரு முறை ஒரு கதைகளை கேட்கும் பொழுதும் தமிழில் டைட்டில் வைப்பதற்காகவே ஆலோசிக்கிறேன். ஆனால் இப்போது ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் பெருகிவிட்டதால், எல்லா மொழிக்கும் ஒரு திரைப்படத்தை கொண்டு போகவேண்டிய சூழல் இருக்கும் பொழுது, ஆங்கிலத் தலைப்பு பலமொழித் திரைப்படங்களுக்கு ஏற்றவாறு இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.