வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து வடிவேலு பேசியுள்ளார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை செனனையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகர் வடிவேலு அளித்த பேட்டியில், " கொரோனா காலத்தில் உருவான கதை தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். முதலில் படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பு வைக்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே இந்த டைட்டில் ஒரு படத்துக்கு வைக்கப்பட்டதால் மூன்று வேறு வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. மறுபடியும் நாய் சேகர், நாய் சேகர் கம்பேக், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மூன்று தலைப்புகளில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பை தேர்வு செய்தது முதலாளி லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா தான். தற்போது இந்த தலைப்பு படத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளது" என வடிவேலு கூறியுள்ளார்.