நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.
அதன்படி 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய 4 படங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் மாதம் முதல் அடுத்தடுத்த மாதங்களுக்கு மாதம் ஒரு படம் என வெளியாகின்றன.
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில், ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான 'உடன்பிறப்பே' என்கிற படம் இந்த பட்டியலில் உள்ளது. இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தஞ்சை பெரிய கோயில் குறித்து ஜோதிகா பேசி சர்ச்சைக்குரியதாக மாறிய கருத்து, ‘உடன்பிறப்பே’ பட ஷூட்டிங்கின் போதுதான் பேசப்பட்டது என்றும், அதற்கான காரணம் மற்றும் ஜோதிகா அவ்வாறு பேசியதற்கு பிறகு நடந்த மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்தும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தப்போ, அங்கே கர்ப்பிணிகளும் பிரசவமான தாய்களும் காத்துக் கிடந்ததை ஜோதிகா பார்த்தாங்க.
முதல் நாள் டெலிவரியான குழந்தையோட ஒரு தாய் வராண்டாவில் உட்கார்ந்திருந்தது அவங்களை ரொம்ப அதிர வைச்சிருச்சு. அந்த ஆதங்கத்தையும் பரிதாபத்தையும்தான் அவங்க பேசினாங்க. பேச்சோட நிற்கலை.
அந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதி கொடுத்தாங்க. அவங்க பேச்சு பரபரப்பான நிலையில், அந்த மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசே நிதி ஒதுக்கியது. அப்போ டீனாக இருந்த மருதுதுரை சார் மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தினப்ப, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டச்சு. ஜோதிகா பேசியதால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் இதெல்லாம்” என இயக்குநர் இரா.சரவணன் பதிவிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் 2021-ல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.