பிரபல நடிகர் சிம்பு நாடாளுமன்ற தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கு அவரது தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திரை பிரபலங்களும், பொது மக்களும் திரளாக தங்களது வாக்கு உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், டி.நகரில் நடிகரும், இயக்குநரும், அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர், வாக்குரிமை குறித்தும், ஜனநாயகம் குறித்தும், வாக்குச்சாவடி குறித்தும் தனக்கே உரிய பாணியில் விளக்கிக் கூறினார்.
இலட்சிய திரவிட முன்னேற்ற கழகம் கட்சியை நடத்தி வரும் டி.ஆர், கட்சி ஆரம்பித்த காலக்கட்டத்தில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தான் போட்டியிட்டதாகவும், அந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு தனக்கே அதிகம் இருந்த நிலையில், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சூழ்ச்சியால் அது நடக்காமல் போனதாக கூறினார்.
அந்த தேர்தலில் தனது மகனும், முன்னணி நடிகருமான சிம்பு என்கிற சிலம்பரசன் ஒரு மகனாக தந்தைக்கு வாக்கு சேகரித்தார் என்றார். மேலும், ஜனநாயகம் என்பது வாக்குரிமையின் ரகசியம் காக்கப்படுவதே என்று கூறிய டி.ஆர், வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் தடுக்கப்படாதவரையில் இந்தியாவில் எந்த ஜனநாயக மாற்றமும் ஏற்படாது என்றார்.
மேலும், தனது மகன் சிம்பு லண்டனில் இருப்பதால், வாக்களிக்க சென்னை வர முயற்சித்தும் ஒரு சில காரணங்களால் அது சாத்தியப்படவில்லை. ஆனால், ஓட்டு போட முடியாததற்கு தன்னிடம் வருத்தம் தெரிவித்தார் என்று டி.ஆர் கூறினார்.