தமிழகத்தில் தற்போது புதிய கூடுதல் தளர்வுகளுடன் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளை முதல் (ஆகஸ்டு 23-ஆம் தேதி) நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக ஆலோசனை நடந்தது. அதன்படி செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கை புதிய கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, ஆகஸ்ட் 23 முதல், தக்க வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அத்துடன் தியேட்டரில் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பொங்கல் சமயத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது திரையரங்க கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து விஜயின் மாஸ்டர் திரைப்படம், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையரங்குகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.