நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு 11.01.2023 அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி கைப்பற்றி உள்ளார். சேலம் ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.
இதனிடையே வாரிசு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும், நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும் நம்மிடையே நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் இடையேயான முதல் நாள் வசூல் வேறுபாடு சுமார் 40 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிகின்றன.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டு மக்கள், விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள் ரிலீஸ் ஆன, இந்த 2023 ஜனவரி 11-ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சுமார் 55 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதாவது இரண்டு படங்களும் இணைந்து சுமார் 40 கோடி ரூபாய் (டிக்கெட் கட்டணம்) கலெக்ட் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள் கிடைக்கின்றன. இவை தவிர உணவு மற்றும் பானங்கள், பார்க்கிங் கட்டணங்கள், போக்குவரத்து கட்டணங்கள் என அனைத்தையும் சேர்த்தால் சுமார் 55 கோடி ரூபாய் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலவழித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.