அமேசான் தளத்தில் அண்மையில் வெளியாகிய தி ஃபேமிலி மேன் 2-ஆம் சீசனில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழகத்திலிருந்து பல அமைப்பினரும் அரசியல் பிரபலங்களும் கடிதங்கள் மூலம் தங்களுடைய கண்டன கருத்துக்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்த தம்முடைய கருத்துக்களை கண்டனத்துடன் கூடிய கடிதம் மூலமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ஈழத்தமிழர்களின் போராட்டம் குறித்து மோசமாகவும் அவதூறாகவும் ஆட்சேபத்துக்குரிய வகையிலும் சித்தரிக்கப்பட்டுள்ள தி ஃபேமிலி மன் 2 வெப்சீரிஸ் கண்டனத்துக்குரிய ஹிந்தி தொடர் என்பதை தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். மேற்படி அண்மையில் பிரபல ஓடிடி இணையதளத்தில் வெளியாகி இருக்கிற இந்த வெப் சீரிஸின் முன்னோட்டம் ஆனது இலங்கையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் நெடிய ஜனநாயக போராட்டக்களத்தில் ஈழத்தமிழர்களின் தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. உடன் அது எந்த வகையிலும் தமிழ் பண்பாட்டு மதிப்புகளை கொண்டதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவே பெருமைமிகு தமிழ் பண்பாட்டை இழிவு படுத்துகின்ற நோக்கிலான இந்த தொடரை, ஒளிபரப்புக்கு ஏற்றவகையிலானது என்று கருதமுடியாது. குறிப்பாக தமிழ் பேசும் நடிகையான சமந்தா உலக அரங்கின் முன் தீவிரவாதியாக காட்சிப்படுத்தப் படுவது உள்ளிட்ட பலவும் இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படி உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பெருமையை நேரடியாக தாக்கி உள்நோக்கம் நிறைந்த விஷமத்தனமான பரப்புரையை செய்துள்ளதை ஏற்கமுடியாது.
இந்தத் தொடரின் டிரைலர் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்களிடையேயும் மற்றும் அரசியல் வட்டாரத்தினிரிடையேயும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இலங்கையில் சமூக அமைதி, நீதி , சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்காக ஈழ உடன்பிறப்புகள் போராடிக்கொண்டு வரும் நிலையிலும் அதற்கு தீர்வுகள் எட்டப்படுவதற்கான முயற்சிகளை நோக்கி அழுத்தம் தரப்பட்டு கொண்டிருக்கும் நிலையிலும் இப்படி ஒரு மோசமான பரப்புரையை அமேசான் மேற்கொள்வது தேவையற்ற ஒன்று.
குறிப்பாக ஈழத் தமிழர்களின் உணர்வினை மட்டுமல்லாமல் தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்த முன்னோட்டத்தின் அடிப்படையில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை உண்டுபண்ணுவது என்பது சற்றே கடினமான ஒன்றாக மாறிவிடும். எனவே இந்தச் சூழலில் அமேசான் ஓடிடியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த வெப்சீரிஸ் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உடனடியாக நிறுத்தப்படவோ, தடை விதிக்கப்படவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.