தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அட்டகத்தியில் தொடங்கி, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய பா.ரஞ்சித், தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பிலான கபாலி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
புலம்பெயர்ந்தோரின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை அடுத்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மீதான அரசியல் ரீதியான ஆதிக்கத்தை மையமாக வைத்து ரஜினி நடிப்பிலான காலா திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஆர்யா நடிப்பிலான 'சார்பட்டா பரம்பரை' படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். 70-80களில் சென்னையில் இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை அடுத்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் ஆர்டிஸ்டுகளாக பயிற்சிபெறும் கதை மாந்தர்கள் சமூகத்தில் காதலையும், காதல் சார்ந்த வெகுசன மக்களின் புரிதலையும், காதலின் பின்னணியில் சமூகத்தின் பொதுப்புத்தியில் இருந்து உருவாகும் அரசியல் விளைவுகளும், அதனால் நிகழும் உயிரிழப்புகள் குறித்தும் புதுமையான காட்சிமொழியில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் நடந்தது. கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதி வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு, தற்போது நடிகர் ரஜினிகாந்த் பா.ரஞ்சித்தை பாராட்டியுள்ளார். இதுபற்றி பகிர்ந்துள்ள பா.ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்துவிட்டு நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் பாராட்டியதில் நெகிழ்ச்சிக் அடைகிறேன்.! நன்றி சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், “இயக்கம், எழுத்து, நடிகர்கள் தேர்வு, கலை, ஒளிப்பதிவு, இசை என இப்படம் உங்களுடைய மிகச்சிறந்த படம்.!” என்று கூறி இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டியுள்ளார்.