நடிகர் தனுஷின் 44 வது படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்டு 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “நம்ம படம் ரிலீஸ் ஆகி, ஒன்றரை வருஷம் ஆகுது. ஆனால் ஒன்றரை வருஷம் கழிச்சு வரும் படம் மாஸாக இருந்தால் நல்லா இருந்திருக்கும் என்றனர். ஆனால் மாஸ் என்றால் என்ன?
ஒரு ஹீரோ பத்து பேரை அடித்துவிட்டு வந்தாலோ, செஞ்சுடுவேன் என பஞ்ச் டயலாக் பேசி மெதுவாக நடந்து வந்தாலோ, ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றினாலோ அதெல்லாம் மாஸ். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு மாஸ் இருக்கு.
நம்ம குழந்தையா இருக்கும்போது நம்மை வளர்க்கும் அப்பா, அம்மா நாம் வளர்ந்த பின்னர் அவர்கள் குழந்தையாகிவிடுவார்கள், அவர்களை நாம் குழந்தையாக நினைத்து நல்லபடியாக பார்த்துக்கொண்டால் அது மாஸ். கடைசிவரைக்கும் செஞ்ச நன்றியை மறக்காமல் இருந்தா அது மாஸ், நம்ம மேல தப்பு இல்லனா கூட ஒரு சூழ்நிலை சரியாக வேண்டும் என இறங்கி வந்து மன்னிப்பு கேட்டால் அது மாஸ்.
நம்ம நண்பன் ஒரு கஷ்டம் என வந்து பணம் கேட்கும்போது, நம் கையில் பணம் இல்லையென்றாலும் கூட, கழுத்தில் இருக்கும் செயினை அடகுவைத்து அந்த காசை நண்பனிடம் கொடுத்தால் அது மாஸ். அப்படிப் பார்த்தால் திருச்சிற்றம்பலம் ஒரு பயங்கரமான மாஸ் படம் தான்.!” என்று பேசியுள்ளார்.