சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், 'தீர்க்கதரிசி'. கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் வகையில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.
தீர்க்கதரிசி படத்தை PG மோகன் - LR சுந்தரபாண்டி ஆகியோர் இயக்கி உள்ளனர். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சத்யராஜ் மற்றும் படக்குழுவினர் பிஹைண்ட்வுட்ஸில் பிரத்தியேக நேர்காணல் அளித்திருந்தனர். அப்போது நடிகர் சத்யராஜிடம் இப்போது இன்று இருக்கும் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிப்பது பற்றி உங்களுடைய கருத்து நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகர் சத்யராஜ், “இது எனக்கு புதிதல்ல. இந்த மாறுதல் என்பது எனக்கு மிகவும் இயல்பாகவும் பழக்கப்பட்டதாகவும் இருந்தது. மணிரத்தினம் சாரின் முதல் திரைப்படமான பகல் நிலவு திரைப்படத்தில் நான் அப்பாவாக நடித்து விட்டேன். மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினி சாரை விட நான் 4 வயது இளையவன் என்றாலும் அவருக்கு அப்பாவாக நடித்த அந்த திரைப்படத்தில் எனக்கு மருமகளாக நடித்த அம்பிகா, பின்னால் எனக்கு ஹீரோயினாக நடித்தார். அவருடன் டூயட் பாடினேன். வேதம் புதிது திரைப்படத்தில் எனக்கு மருமகளாக நடித்த அமலாவுடன் பின்னால் டூயட் பாடினேன். அதனால் எனக்கு இந்த மாறுதல்கள் புதிதாக இல்லை. நான் கடைசியாக நடித்த நான்கைந்து திரைப்படங்களும் தோல்வி படங்கள் என்பதால் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் எனக்கு வரும் இந்த புதிய மாற்றங்கள் மிகுந்த கேரக்டர்களை செய்ய ஆரம்பித்தேன் என்பதுதான் உண்மை.
ஆனால் இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்றால் பாரதிராஜா, மணிவண்ணன், பி.வாசு மற்றும் ஃபாசில் ஆகிய இயக்குனர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் வால்டர் வெற்றிவேல் எனும் ஒரு சீரியஸ் கேரக்டர், பிறகு ஒரு காமெடி, சைடு கேரக்டர், வில்லன், குணச்சித்திர கேரக்டர் என எப்படி வேண்டுமானாலும் என்னை பயன்படுத்தலாம் என காட்டினார்கள். அதனால்தான் புதிய புதிய கேரக்டரில் பண்ணுவதற்கான வாய்ப்புகள் இன்று கிடைக்கின்றன. நான் அவ்வளவு கண்டிப்பான ஆள் எல்லாம் இல்லை. கதவு திறக்கும் வழிகளில் நான் போய்க்கொண்டே இருப்பேன். சுவர் இருந்தால் அந்த வழியில் திரும்பி விடுவேன்.
அதனால் தான் இப்போது லவ் டுடே, ராஜா ராணி போன்ற கேரக்டர்கள் நிறைய வருகின்றன. கட்டப்பாவையும் நாம் ஏற்க வேண்டும். இவற்றை என்ஜாய் பண்ணுவதே சிறந்தது என்று தான் கருதுகிறேன்!” என்று பேசினார்.