நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானதற்கு பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இசையமைக்கப்பெற்றன.
இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை படத்தின் இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி பேட்டி அளித்துள்ளனர்.
இதில் லெஜண்ட் சரவணன் நடிப்பை பற்றி பேசும்போது, “அவர் முதல் பட நடிகர் தானே? நேற்றுவரை கடையில் வியாபாரம் தானே பண்ணிக்கொண்டு இருந்தார். அவரிடம் போய் சிவாஜி மாதிரி நடிப்பதாக ட்ரோல் பண்ணுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு உடல்மொழி உள்ளது. தம்பி ராமையா கதறி அழுவார். அப்படிதான் சரவணன் சார் ஷட்டிலாக நடிப்பதை தன்னுடைய உடல்மொழியாக கொண்டிருப்பார். இவருடைய கேரக்டர் டிசைனையே அதிக உணர்வுகளை வெளிக்கொண்டு வராத ஹிப் மேன் என்கிற ஒரு பட கேரக்டரை கொண்டு உருவாக்கினோம். முதல் படத்திலேயே இப்படி நடித்துள்ளாரே? அதை ஏன் பார்ப்பதில்லை யாரும். பலரும் இந்த படத்தை தற்போது ஓடிடியில் பார்த்துவிட்டு, இந்த படம் நல்லாருக்கே, ஏன் தியேட்டரில் விமர்சிக்கப்பட்டது என மதிப்பீடு தருகிறார்கள். அனைவரும் அப்ரிசியேட் பண்ணுகிறர்கள். லெஜண்ட் சார் தவிர்க்க முடியாத நடிகர், இன்னும் பல படங்களை அவர் பண்ணுவார். இந்த படம் தியேட்டர் அனுபவத்துக்கான திரைப்படமாகவே நாங்கள் உருவாக்கினோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, “அவரோட முதல் படத்துலயே 40, 50 படம் நடித்த ஸ்டார்களுக்கு இணையாக நடித்துள்ளார்” என கூறியவர்கள், “ரஜினி, எம்ஜிஆர் ஆகியோரின் சாயல் இருந்ததாக சொல்லப்படுகிறது என்றால், அதை செய்யக்கூடாதுன்னு என்ன இருக்கு? லெஜண்ட் சாரின் விருப்பமும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியுமே அதுதான், கதையும் அப்படிதான் டிசைன் செய்யப்பட்டது. அதை முடிந்தவரை நம்பகத்தன்மையுடன் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தகுந்த தேர்ந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். படமும் ஒரு ரெகுலர் படத்துக்கான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதுதான்.
அவரும் சக நடிகர்களுடன் பேசி கலந்து, அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு சக கலைஞர்களின் நேரம் விரையம் ஆகக் கூடாது என்கிற கவனத்துடன் வேகமாக கற்றுக்கொண்டு செய்தார். ஹாரிஸ் ஜெயராஜ் சார் பின்னணி இசைக்காக அவ்வளவு மெனக்கெட்டார். ஆனால் சில ரசிகர்கள் மட்டுமே முன் தீர்மானமாக கிண்டல் செய்யும் நோக்கில் வந்தவர்கள் ஏனைய பார்வையாளர்களை தொந்தரவு செய்தனர்.” என குறிப்பிட்டுள்ளனர்.