இயக்குனர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் அஞ்சலி கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குனர் ராம். பேரன்பு படத்தை தொடர்ந்து, நடிகர் நிவின் பாலியை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், இயக்குனர் ராம்.
மாநாடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். நிவின் பாலியுடன் நடிகர் சூரி, நடிகை அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. அடுத்தடுத்து கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
மேலும், ராம் - நிவின் பாலி படத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தது.
"ஏழு கடல் ஏழு மலை" என இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் நடிகை அஞ்சலியின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது. வண்ணமயமான இரவில் நாற்காலி மேல் அமர்ந்து அஞ்சலி இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.