அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸின் பிரத்தியேக நேர்காணலில் இயக்குநர் மணிரத்னத்திடம், “தளபதி மகாபாரதம்... ராவணன் ராமாயணம்.. மணி சாருக்கு எப்பிக் மேல எப்போதும் ஒரு காதல் இருக்கிறதா?” என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் மணிரத்னம், “நாம வளர்ந்ததெல்லாம் எப்பிக்னாலதான். அந்த எப்பிக் ஏன் இன்னும் எப்பிக்கா இருக்கு? சின்ன வயதில் இருந்தே நாம் யோசிப்போம். பொன்னியின் செல்வன் 70 வருடம் முன்பு எழுதப்பட்டது.
ஆனால் அதில் இருக்கும் ஆழம், தத்துவம், அரசியல், தியாகம், முற்போக்கு சிந்தனை, வளர்ச்சி எல்லாமே இன்றளவும் இருக்கிறது. மகாபாரதம் பல ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில் நிறைய வெர்ஷன்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு மாநிலத்துக்கும், மொழிக்கும் அது வெவ்வேறு வடிவங்களில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. தெருக்கூத்து. கதகளி உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகள் மூலமும் கதையாக வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது. ஆக, அந்த கதைக்கு பல இண்டர்பிரிடேஷன் சொல்ல முடியும்.
ஆனால் கல்கி இப்போ எழுதிய நாவல் இது. இன்றளவும் நம்மோடு இருக்கும் ஒரு நாவல். அதை நேர்மையாக சொல்ல முயற்சித்துள்ளோம். இதில் கல்கியின் இண்டர்பிரிடேஷன் இருக்காது, அவர் சொன்னதை எடுத்துகொண்டு கோர்வையாக சொல்லப் பார்த்திருக்கிறோம். அதில் இருக்கும் நெளிவு சுளிவு இன்றி நேர்க்கோடாக சொல்லப் பார்த்திருக்கிறோம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.