லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படம் குறித்த அப்டேட்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் முதல் முறையாக திரையில் ஹீரோ அவதாரம் எடுத்து 27 ஆண்டுகள் ஆன செய்தி அவர் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
1984ம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து இயக்கிய ’வெற்றி’ படத்தில் 10 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அவர் 1992ம் ஆண்டு வெளியான ’நாளைய தீர்ப்பு’ படத்தில் நாயகனாக தோன்றினார்.
தொடர்ந்து படங்களில் நடித்த விஜய்க்கு 1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ’பூவே உனக்காக’ படம் திருப்புமுனையாக அமைந்தது. நடிப்பு மட்டும் அல்லாமல் தான் நடிக்கும் படங்களுக்கு பின்னணி பாடியும் உள்ள அவர் ’பம்பாய் சிட்டி’, ’கூகுள் கூகுள்’ உட்பட 30க்கு மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
ரொமான்ஸ், ஆக்ஷன் படங்களில் பட்டையைக் கிளப்பிய அவருக்கு குஷி, கில்லி, துப்பாக்கி, பிகில் பெரும் வெற்றியை பெற்றுத் தந்தன.
தன் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் திரையில் ஹீரோவாக தடம் பதித்து இன்றோடு 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.